புதன், 10 நவம்பர், 2010

தொழிற்சங்க போராட்டமும்- வரலாறு கூறும் பாடமும் - டி.கே.ரங்கராஜன் எம்.பி.

முதலாளித்துவ சமூகத்தில் உழைப்புக் கும், மூலதனத்திற்கும் இடையிலான முரண் பாடு தவிர்க்கமுடியாதது. மூலதனத்தால் ஒட்டச் சுரண்டப்படுகிற தொழிலாளர்கள் ஒன்று திரண்டு போராட முன்வருகிறார்கள். இதற்கு தலைமை தாங்குவது, வழிநடத்துவது, வர்க்க உணர்வுள்ள தொழிற்சங்கங்களின் தலையாய கடமையாகும்.

இந்திய தொழிலாளர்களின் நிலை குறித்து ஆராய பிரிட்டிஷ் அரசு கமிஷன் ஒன்றை அமைத்தது. ராயல் கமிஷன் ஆப் லேபர் என் றழைக்கப்பட்ட இந்த கமிஷனின் நடவடிக் கைகளை புறக்கணிக்க வேண்டுமென்று ஏஐடியுசி பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தக் கமிஷன் தொழிலாளர்களையும் தொழிற்சங்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் அமைக்கப் பட்டதால்தான் ஏஐடியுசி அதை எதிர்த்தது.

ஆனால் இந்த முடிவை எதிர்த்து பின் னாளில் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி உள்ளிட்ட சில தலைவர் கள் வெளிநடப்பு செய்தனர். அவ்வாறு வெளி யேறிய அவர்கள் தனி அமைப்பை உரு வாக்கியதோடு, அறிக்கை ஒன்றையும் வெளி யிட்டனர். ஏஐடியுசி அரசுக்கு எதிராக வர்க்க போராட்டத்தை தூண்டிவிடுகிறது என்றும், இது ஒரு தொழிற்சங்கத்தின் வேலையல்ல என்றும் அவர்கள் கூறினர். மேலும் 1928-29களில் தொழிற்சங்க இயக்கத்தில் பல் வேறு குழப்பங்களும் உருவாக்கப்பட்டன.

இந்நிலையில் 1929ம் ஆண்டு நடைபெற்ற ஏஐடியுசி மாநாட்டிற்கு தலைமைப் பொறுப் பேற்ற தலைவர் இவர்களுக்கு பதிலளித்து பேசுகையில் கீழ்க்கண்டவாறு கூறினார்.

“முதலாளித்துவ சமூகத்தின் கருப்பை யிலேயே வர்க்கப் போராட்டத்திற்கான கரு அமைந்துள்ளது. வர்க்கப் போராட்டத்தை பிரச்சாரம் செய்கிறோம் என்றும், வர்க்கங் களுக்கிடையேயான தூரத்தை மேலும் விரிவுபடுத்துகிறோம் என்றும் நம்மீது அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது. முத லாளித்துவத்தின் காரணமாகவே இந்த தூர மானது விரிவானதாக இருக்கிறது... சோச லிஸ்ட்டுகள் அல்லது கம்யூனிஸ்ட்டுகள் தான் வர்க்கங்களாக பிரிந்து அவற்றிற் கிடையே கசப்புணர்வை பிரச்சாரம் செய் கிறார்களா? அல்லது தனது கொள்கை, முறை ஆகியவற்றின் மூலம் மனித குலத்தில் பெரும் பகுதியினரை பழங்காலத்தில் இருந்த அடிமைகளை விட பல வகையில் மோசமான நிலையில் உள்ள கூலி அடிமைகளாக மாற்றி யது முதலாளியின் ஏகாதிபத்தியம் அல்லவா? இந்த வர்க்கப் போராட்டம் என்பது நம்மால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அது முதலாளித்துவத்தினால் உருவாக்கப்பட்டது. முதலாளித்துவம் நீடிக்கும் வரையில் அது வும் நீடிக்கவே செய்யும்... வர்க்கப்போராட்டம் இருந்து வந்துள்ளது. இன்றும் நீடிக்கிறது. நெருப்புக் கோழி மணலில் தலையை புதைத் துக் கொள்வது போல் அதை ஒதுக்கிவிடு வதன் மூலம் அதிலிருந்து நாம் விடுபட்டுவிட முடியாது. இதற்கான காரணங்களை நாம் அகற்றுவதன் மூலம் மட்டுமே நம்மால் அமைதியைக் கொண்டுவர முடியும்”

இவ்வாறு மாநாட்டில் பெருமைமிகு தலைமை உரையாற்றியவர் வேறுயாருமல்ல. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் தான்.

ஆனாலும் அவர் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு தொழிலாளர் போராட்டங்களை இத்த கைய கண்ணோட்டத்தில் அணுகினார் என்று கூறமுடியாது. அவர் தலைமை தாங்கிய வர்க் கத்தின் நலன்களுக்கு ஏற்பவே செயல்பட்டார்.

இன்றைக்கு கம்யூனிஸ்ட்டுகள் தொழில் அமைதியை கெடுக்கிறார்கள் என்றும், போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள் என் றும், முதலீடு வருவதை முடக்குகிறார்கள் என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இவர் களுக்கு நேரு அன்றைக்கு கூறிய பதில் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பொருந்தும்.

பின்னாளில் காங்கிரஸ்காரர்கள் கம்யூ னிஸ்ட்டுகள் போராட்டத்தை தூண்டுவதாக குற்றம்சாட்டிய பொழுது, திராவிட முன்னேற் றக்கழகத்தின் தலைவரான அண்ணா அவர் கள் தனக்கே உரிய பாணியில் “பணத் தோட்டம்” நூலில் இவ்வாறு பதிலளித்தார்.

“காங்கிரஸ் கட்சியினர் தொழிலாளர் களிடம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உள்ள தொடர்பை போட்டியிட்டோ, பிரச்சாரம் மூலமோ அடக்குவதன் மூலமோ துண்டித்து விடக்கூடும்- துண்டிக்கப்படுவது அத்த னையும் அழிவதில்லை. துளிர்ப்பதுண்டு... வெட்ட வெட்ட சுரப்பதும்... அரைக்க அரைக்க மணப்பதும்-துண்டிக்க துண்டிக்க துளிர் அதிகம் விடுவதுமாகப் பல இயற்கை நிகழ்ச் சிகள் உண்டு. துண்டிக்கவே முடிகிறது என்று கொண்டாலும், தொடர்பை போக்கி விடுவதால் பிரச்சனையை போக்கிவிட முடியாது. கம்யூனிஸ்ட்டுகளை தொழிலாளர் களிடமிருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக காங்கிரஸ் காரர்களைக் கொண்டு தொழிலாளர் இயக்கத்தை நடத்தச் சொன் னாலும் மூலம் கெட்டுவிடப்போவதில்லை. காங்கிரஸ்காரர் அந்த முனையில் வேலை செய்ய ஆரம்பித்த சில காலத்திற்குப் பிறகு தொழிலாளர் பிரச்சனையை நேரடியாக கவனிக்கத் துவங்கியதும் தனது வெள்ளைச் சட்டை காவியேறி சிவப்பாகி விடுவதைக் காண்பார்கள்; அதாவது அவரும் கம்யூனிஸ்ட் ஆகிவிடுவார். கோவை வேலை நிறுத்தத் துவக்கத்தின் போதே ஆலைக்காரர்கள் தமது அறிக்கையிலே என்ன கூறுகின்றனர்? கம்யூ னிஸ்ட்டுகள் மீது என்ன கூறுவார்களோ வழக்கமாக, அதே குற்றச்சாட்டுத் தான். “தகராறு கிளப்புகிறார்கள்; தூண்டிவிடு கிறார்கள்; பலாத்காரச் செயலில் ஈடுபடு கிறார்கள்; உருட்டல் மிரட்டல் செய்கிறார்கள்.” இவைகளை எல்லாம் செய்வதாகத்தான் கம்யூனிஸ்ட்டுகள் மீது குற்றம்சாட்டினர். கோவையிலே ‘ஸ்டிரைக்’ நடத்தும், தொழிற்சங்கத்தாருக்கும் இதேதான். முத லாளிமார் அறிக்கை மூலம் அர்ச்சனை நடக்கிறது. அது மட்டுமா!இல்லை! கம்யூ னிஸ்ட்டுகளை விட இவர்களே மோசமான முறை களில் நடந்துகொள்கிறார்கள்-என்று குறை கூறுகிறார்கள் முதலாளிமார்கள்.

“ஐவ ளை அடிளவ ரகேடிசவரயேவந வாயவ வாந ருniடிn டநயனநசள iளேவநயன டிக உசநயவiபே ய உடிபேநnயைட யவஅடிளயீாநசந உடினேரஉiஎந வடி ய ளநவவடநஅநவே ளாடிரடன நெ சநளடிசவiபே வடி iவேiஅனையவiடிn. ஏiடிடநnஉந யனே டிவாநச வயஉவநைள றாiஉா யசந றடிசளந வாயn வாடிளந யனடியீவநன லெ வாந உடிஅஅரnளைவள...”- (இந்து 13-2-47, 4ம் பக்கம்)

இப்படித்தான் நிலைமை எழும். வேலை நிறுத்தத்தை யார் நடத்தினாலும் குற்றச் சாட்டு இதுவாகத்தான் கூறப்படும்! பிள்ளை யார் சுழி போட்டுப் புதுக்கணக்குத் துவக்கும் போதே, ஆலை அரசர்கள், இந்த வாசகத்தை கொட்டை எழுத்திலே எழுதி வைத்துவிடு வர். நாட்டிலே யார் தொழிலாளர் பிரச்சனைக் காக வேலை செய்தாலும் இந்த ஏட்டை எதிரிலே நீட்டுவர்”

இன்றைக்கு தமிழகத்தில் துவங்கப்பட் டுள்ள பன்னாட்டு நிறுவனங்களில் தொழி லாளர்கள் ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள். இதை எதிர்த்து போராடும் அவர்களுக்கு சிஐடியு தலைமை தாங்குகிறது. இந்தத் தொழிற்சாலைகளில் ஏதோ தொழில் அமைதி பூத்துக் குலுங்குவது போலவும், மார்க்சிஸ்ட்டுகள் தொழிலாளர்களை தூண்டி விட்டு அதை கெடுப்பவர்கள் போலவும் சித்தரிப்போரின் சிந்தனைக்கு பண்டித நேருவும், அறிஞர் அண்ணாவும் முன்வைத்த கருத்துக்களையே சமர்ப்பிக்கிறோம்.

ஹூண்டாய், பாக்ஸ்கான் போன்ற பன் னாட்டு நிறுவன ஆலைகளில் குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமைகள் கூட மறுக்கப்படு கின்றன. ஆலை வாயிலில் கொடியேற்றுவது கூட குற்றம் என கூறப்பட்டது. மேலும் சுரண்டலுக்குள்ளாகும் தொழிலாளர்கள் தன் னெழுச்சியாக போராட முன்வருகிறார்கள். அவர்களுக்கு சிஐடியு தலைமை தாங்குகிறது.

குறிப்பாக ஹூண்டாய், பாக்ஸ்கான் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தில் பல் வேறு கள அனுபவங்கள் கிடைத்துள்ளன. வேலைநீக்கம், இடைநீக்கம், சட்டவிரோத சம்பள வெட்டு, பொய் வழக்கு, சிறை, கை விலங்கு என அடக்குமுறைகளை சந்திக்க நேர்ந்தது. போராட்டங்களின் மூலமாகவும், நீதிமன்றங்களின் வாயிலாகவும் அநீதி களுக்கு எதிரான போராட்டத்தை தொய்வின்றி தொடர வேண்டியுள்ளது.

நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்தத் தொழி லாளர்கள் 13ஆயிரம் பேர் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்பன உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து போராடினார்கள். அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தின. பந்த் உள்ளிட்ட போராட்டம் மூலம் பொதுமக்களும், அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

ஹூண்டாய், பாக்ஸ்கான், நெய்வேலி தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன் வைத்தும், மத்திய அரசின் பொதுத்துறை நிறு வனமான என்.எல்.சி. தொழிலாளர் போராட் டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கவும் பாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு ஆலை களில் குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமை கள் கூட மறுக்கப்படுவதன் அபாயத்தை எடுத்துரைக்கவும் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை நானும் சிஐடியு பொதுச்செய லாளர் தோழர் அ.சவுந்தரராசனும் சந்தித்தோம்.

அடக்குமுறைகளை எதிர்த்தும் நடை பெற்ற போராட்டங்களில் ஜனநாயக எண் ணம் கொண்ட அனைத்து தொழிற்சங்கங் களும் பங்கேற்றன. இதன் மூலம் பரந்துபட்ட தொழிற்சங்க ஒற்றுமை உருவாகியது. மாநில முதல்வர் தலையீட்டால் நெய்வேலி உடன் பாடு ஏற்பட்டது நல்ல விஷயமாகும்.

மேலும், ஹூண்டாய், பாக்ஸ்கான் தொழி லாளர்களுடைய நியாயமான கோரிக்கை களை பேசித்தீர்க்க முதல்வர் உத்தரவிட் டுள்ளார். அரசு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமென்று நம்புகிறோம்.

மேற்குவங்கம், ஆந்திரம் போன்ற மாநி லங்களில் உள்ளதைப்போல் தமிழ்நாட்டிலும் தொழிற்சாலையில் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க ஒரு சட்டம் தேவைப்படுகிறது. அதனுடைய அவசியத்தை முதல்வரிடம் வலியுறுத்தினோம். முதல்வரும் அதை பரிசீலிப்பதாக ஏற்றுக்கொண்டுள்ளார். இச்சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று நம்புகிறோம்.

தொ.மு.ச. ஏற்கனவே ஒரு உடன் பாட்டிற்கு வந்தபோதும் என்.எல்.சி. தொழி லாளர்கள் அதை ஏற்கவில்லை. இந்த யதார்த் தத்தை முதல்வரும் உணர்ந்ததால்தான் பிரச் சனையில் தலையிடக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார். இந்த பின்னணியில் தமிழக முதல்வரின் தலையீட்டின் காரண மாக என்.எல்.சி. தொழிலாளர் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது பாராட்டத் தக்கது. அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர் களையும் நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசின் தலையீடு தொடர்ந்து தேவைப்படுகிறது.

தொழிலாளர்கள் இன்றி தொழில் வளர்ச்சி இல்லை. தொழிலாளர்களின் உரிமைகள் பாது காக்கப்படும்போது தான் தொழில் அமைதி யும் பாதுகாக்கப்படும். கம்யூனிஸ்ட்டுகள் தொழில் வளர்ச்சியிலும், தேசத்தின் வளர்ச்சி யிலும் அக்கறை கொண்டவர்கள். அதே நேரத் தில் தொழிலாளர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்ட வர்கள். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானதல்ல.

கனவோடு போகிறது தொழிலாளி வாழ்க்கை! - மாலதி சிட்டிபாபு

பிஒய்டி தொழிற்சாலை - அதாவது “உங்கள் கனவுகளை நிஜ மாக்குங்கள்” என்பது நிறுவனத்தின் பெயர். இந்நிறுவனமும் ‘பாக்ஸ்கான்’ போல நோக் கியா கம்பெனிக்கு செல்ஃபோனுக்கான பிளாஸ்டிக் மற்றும் உலோகத்தாலான மேலு றையை தயாரித்து சப்ளை செய்து வருகிறது.

இக்கம்பெனியில் பணியில் சேர்ந்தால் கைநிறைய சம்பளம் கிடைக்கும்; வாழ்க்கை வளம் பெறும் என்ற கனவுகளோடு நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் ஏஜெண்டுகளி டம் ரூ.25,000, ரூ.30,000, ரூ.50,000 ஒரு லட் சம் ரூபாய் கூட முன்பணம் கொடுத்து பணி யில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த் தபடி எதுவும் நடக்கவில்லை. மாறாக பல் வேறு பிரச்னைகளைத்தான் அவர்கள் சந் தித்தார்கள்.

6 மாதங்கள் பணி முடித்தவுடன் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை நம்பினார்கள். நிரந்தரம் எட்டாக்கனியாகவே உள்ளது. 8 மணிநேர வேலை, பணி நிரந்தரம், அடிப்படை வசதிகள், நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் உரிமை - என்று சில அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபர் 21 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. தொழிலாளர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். பிரேம் என்ற தொழி லாளி தற்கொலை செய்து கொள்ள முயற் சித்து, சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு தொழிலாளி வெளியே அனுப்பப்பட்டார்.

மீண்டும் அக்டோபர் 28ந் தேதி முதல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் கள். தற்பொழுது கம்பெனி நிர்வாகம் 437 பேரை சஸ்பென்ட் செய்துள்ளது. சட்டவிரோத மான லாக்-அவுட்டை அறிவித்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர் களின் நிலைமைகளைப் பற்றி ஆய்வு மேற் கொண்டு வரும் மதுமிதா, சந்திரிகா ஆகியோ ருடன் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப் புக்குழு மாநில அமைப்பாளர் மாலதி சிட்டி பாபுவும் (கட்டுரையாளர்), இணை அமைப் பாளர் டி.ஏ.லதாவும் சென்று அந்த தொழி லாளர்களை சந்தித்தனர். அப்போது அவர் கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் கூறிய விஷயங்கள்:

பணியாற்றுபவர்களில் அதிகம் பேர் கிருஷ்ணகிரி, குமரி மாவட்டங்களிலிருந்து வந்துள்ளார்கள். ஒரு சிலர் சென்னையை சுற்றியுள்ள இடங்களிலிருந்து வருகிறார்கள். 18 - 25 வயதுள்ள இளம் ஆண், பெண் தொழி லாளர்கள் 12 மணி நேரம் பணியாற்றுகிறார்கள்.

12 மணி நேர ஷிஃப்டில் 5 லட்சம் கவர் கள் தயாரிக்கப்படுகின்றன. 13 தொழிலாளிகள் 1 மணி நேரத்தில் 760 பீஸ்களை தயாரித்து விடுகின்றனர். கைபேசியின் மேல் கவரை மாடலுக்கேற்ப இணைத்து தயாரிக்கும் பிரிவில் பெண்களே அதிகம். அவசரம் என் றால் கூட மாற்றுத் தொழிலாளி வராமல் அப்பெண் தொழிலாளி அவ்விடத்தை விட்டு கழிப்பறைக்குக் கூட செல்லமுடியாத அவ லம். மிஷினிலிருந்து நேரடியாக எடுக்கும் மேலுறையை அவர்கள் தொடுவதால் உள் ளங்கைகளில் சுடு கொப்பளங்கள் ஏற்படுவது சகஜமாக உள்ளது.

இவர்கள் காலை 8 மணிக்கு கம்பெனிக் குள் நுழைய வேண்டும். இரவு 8 மணிக்குத் தான் வெளியே வருவார்கள். மறு ஷிஃப்ட் இரவு 8 மணிக்கு உள்ளே சென்று காலை 8 மணிக்கு வெளியே வருகிறார்கள். 5 - 10 நிமிடம் தாமதமாக வந்தால்கூட சம்பளப் பிடித்தம்.

காலையில் கொடுக்கப்படும் சிற்றுண்டி யில் புழு. டீ என்னும் பெயரில் வெறும் சுடு தண்ணீர்தான். மதியம் கொடுக்கப்படும் சாப் பாடும் சாப்பிட முடியாது. சாப்பாட்டில் பல்லி விழுந்திருந்தால் கூட பல்லியை எடுத்துப் போட்டு விட்டு சாப்பிட வேண்டும். இரவில் கொடுக்கப்படும் ஹார்லிக்ஸ் இதே நிலை தான். குடிக்கக் கொடுக்கும் தண்ணீரில் அள வுக்கு அதிகமான குளோரினைக் கலந்து வைப்பதால் குடிக்க முடிவதில்லை. குடிக்க லாயக்கில்லை.

டீ இடைவேளை 10 நிமிடங்கள். உணவு இடைவேளை அரை மணிநேரம். இதைத் தவிர எந்தக் காரணத்தை முன்னிட்டும் வேறு இடைவேளை கிடையாது. ஒரு ஷிஃப்டில் 200 பெண் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கழிப்பறைகள் 4 தான். அதையும் டீ, உணவு இடைவேளையில் தான் பயன்படுத்த வேண்டும். இயற்கை உபா தையைக்கூட சுதந்திரமாகக் கழிக்க முடியாது.

பெண்களுக்கென்று மாதந்தோறும் வரும் மாதவிடாய்க் காலத்தில் கூட ஒரு 10 நிமிடம் கழிப்பறைக்கு செல்ல அனுமதி வாங்க அவர்கள் படும்பாடு; இதை விளக்க முற்படும் பொழுது அப்பெண்களின் கண்களில் கண்ணீர் கொப்பளிக்கிறது.

சுதந்திர நாட்டில் தான் வாழ்கிறோமா! பெண் பெருமை பேசி பேசி காலம் கழிக்கும் மாபெரும் தலைவர்கள் உலாவரும் இத்தமிழ்த் திருநாட்டிலே காலூன்றி, கொள்ளை லாபத் தை நோக்கமாகக் கொண்டு சுரண்டும் பன் னாட்டு நிறுவனத்திலே நம் வீட்டு பெண் பிள் ளைகள் படும்பாடு?!?!

பெண்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தவுடன் தியாகு என்ற சூப்பர்வைசர் அப்பெண்களைப் பார்த்து “நீங்கள் மூன்றுநாள் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் மூன்று மாதங் கழித்து வாந்தி எடுப்பீர்கள்” என்று கூறியிருக் கிறான். அவனை என்ன செய்வது! பெண் தொழிலாளர்களை இதைவிட மட்டமான ஆபாச வார்த்தைகளால் நோகடிக்க முடியாது.

கேட் அருகே விடிய விடிய

இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘ரூபா’ என்ற பெண் தொழிலாளி இரவு ஷிஃப்டிற்கு சரியாக 8 மணிக்கு பதில் அரைமணி நேரம் காலதாமதமாக சென்றிருக்கிறார். அரைமணி நேரம் காலதாமதமாக வந்ததால் அவரை பணிநீக்கம் செய்து விட்டதாக, இரவு நேரம் என்று கூட பார்க்காமல், கம்பெனியை விட்டு வெளியேறச் சொல்லியிருக்கிறது நிர்வாகம். வெளியேறச் சொன்னது மட்டுமல்லாமல் செக்யூரிட்டியிடமும் அப்பெண்ணை எந்தக் காரணத்தை முன்னிட்டும் உள்ளே அனு மதிக்கக்கூடாது என்று எச்சரித்து உள்ளது. என்னே மனிதாபிமானம்! திரும்பச் செல்லப் போக்குவரத்து வசதி இல்லை. 4 கிலோ மீட்டர் நடந்து சென்றால்தான் ஏதாவது வண்டியை பிடிக்கமுடியும். இரவு நேரத்தில் அதுவும் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. பாவம் என்ன செய்வாள் அப்பெண், அந்தக் கம்பெனியின் கேட் அருகில் விடிய விடிய உட்கார்ந்து உள்ளார்.

மற்றொரு பெண் தொழிலாளி ‘பூவிழி’; தன் சகோதரி இறந்துவிட்டார், காரியத்திற்குச் செல்ல அனுமதி கேட்ட பொழுது அனுமதி வழங்கப்படவில்லை. காரியத்தைத் தள்ளி வைக்கச் சொன்னார்கள். அந்த தொழிலாளி லீவு போட்டு சென்றுள்ளார். லீவு போட்ட தற்கு எச்சரிக்கை ஓலை (றயசniபே டநவவநச) கொடுக்கப்பட்டது.

தேசிய விடுமுறையன்று கூட இரவு ஷிஃப்டில் வந்து பணிபுரிய வேண்டும். உற்பத்தி ஒன்றே குறிக்கோள். கை கால் வலி, தலைவலி, இடுப்புவலி என்று ஒரு 5 நிமிடம் எழுந்து நின்றால், அவர்களை எழுத முடியாத ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவது.

காண்ட்ராக்டர்களிடம் பணம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்தவர்கள் பலர் சரியான சம்பளம் கிடைக்காததாலும், பணிச்சூழலை சகித்துக்கொள்ளமுடியாமலும் வெளியேறி விட்டனர். அவர்கள் கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்கவில்லை.

லாபம் ஒன்றே பிரதான நோக்கமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் தொழி லாளர் நலச் சட்டங்கள் அமலாக்கப்பட வில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பணிபுரியும் 4000 தொழிலாளர்களில் 800 பேர்தான் நிரந்தரத் தொழிலாளிகள். நிரந்தரத் தொழிலாளிக்கும் காண்ட்ராக்ட் தொழிலாளிக் கும் பணியில் எவ்வித வித்தியாசமும் இல்லை.

சில தொழிலாளிகளுக்கு கைகளில் விரல் நசுங்குவது சர்வசாதாரணமாக நடக் கிறது. தீப்புண் காயங்கள் தவிர்க்க வழங்கப் படும் கையுறைகள் தரமானவையாக இல்லை; நாலைந்து நாட்களுக்கு மேல் பயனற்றுப் போய்விடுவதால் உள்ளங்கைகளில் கொப்பு ளங்கள் ஏற்படுவது சகஜமாக உள்ளது.

வறுமையின் காரணமாக பிழைப்புத்தேடி பன்னாட்டு நிறுவனத்தில் பணியில் சேரும் தொழிலாளர்கள், தங்கள் எலும்புகள் நொறுங்க கொடுக்கும் உழைப்பின் பலன் கோடிகளாக மாறி முதலாளிகளின் கல்லாப்பெட்டியை நிரப்புகின்றது!

பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தால் கண்ணியமான வாழ்க்கை நடத்தலாம் என்ற எண்ணம் கனவாகி, இந்த இளம் தொழிலாளி களின் ஆசைகள் நிராசை ஆகின்றன!

பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை களை பல்வேறு வடிவங்களில் வாரிவழங்கும் தமிழக அரசு, அந்நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்குமா!?!

கொத்தடிமைகளாக நடத்தப்படும் இந்த இளம் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக் கையில் இனியேனும் இறங்குமா தொழிலாளர் நலத் துறை!

(கட்டுரையாளர், உழைக்கும் பெண்கள் ஓருங்கிணைப்புக்குழு அமைப்பாளர், தமிழ்நாடு)

‘சந்தை’க்கு எதிரானவர்கள் அல்ல! - பிரகாஷ் காரத்

புகழ்மிக்க கல்வியாளர்களை உரு வாக்கிய சென்னை கிறிஸ்தவக் கல்லூரி.

அக்டோபர் 30 மாலை வேளை.

1965 காலகட்டத்தில், தான் பி.ஏ. படித்த நினைவுகளை அசைபோட்ட வாறு, பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த அந்த சிறப்புச் சொற்பொழி வில் பங்கேற்றார் பிரகாஷ் காரத்.

பெரும் மரியாதைக்குரிய நமது பழைய மாணவர் பிரகாஷ் காரத், “சந்தைப் பொருளாதாரம் மற்றும் அந்நிய முதலீடு” என்ற பொருளில் உரையாற்றுவார் என்று கிறிஸ்தவக்கல்லூரி பழைய மாணவர் சங்க சென்னை பிரிவு அறிவித்திருந்தது.

சங்கத்தின் நிர்வாகிகளான ரெவி தாமஸ், போத்தன் செரியன், கே.எம்.மம் மன் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் அலெக்சாண்டர் ஜேசுதாசன் ஆகியோ ரும், கல்வியில் சிறந்த பேராசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்ற அந்த சந்திப் பில், மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்தியாவின் உண்மை முகம் என்ன என்பதை எடுத்துரைத்தார் பிர காஷ் காரத்.

இந்தக் கல்லூரியில் அக்காலத்தில் மாணவர்களோடு நண்பர்களாகப் பழகி, அனைத்தையும் கற்றுக்கொடுத்த தலை சிறந்த பேராசிரியர்களின் மதிப்புமிக்க மாணவராக விளங்கியவர் பிரகாஷ் காரத். பின்னாளில் இங்கிலாந்தில் உள்ள எடின் பர்க் பல்கலைக்கழகத்திற்கு சென்று ஆய்வுப்படிப்பு மேற்கொள்ள வழிகாட்டிய சென்னை கிறிஸ்தவக்கல்லூரி அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர் ரெவ ரண்ட். டங்கன் பாரஸ்டர், ஆங்கில இலக் கியப் பேராசிரியர் ஜே.வசந்தன் போன்ற வர்களை பெரிதும் மதிக்கும் காரத், இன் றைக்கு இந்தியாவின் சிறந்த எதிர்காலத் திற்கு உரிய வழி கூறும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாள ராக அந்த அரங்கில் நின்றார்.

இந்திய அரசியலில், கூட்டாட்சி எனும் கட்டமைப்பில் மத்திய-மாநில உறவுகளை மறுசீரமைக்க வேண்டியுள் ளது என்பதில் துவங்கி, சந்தை என்பதை மார்க்சிஸ்ட்டுகள் எதிர்க்கிறார்களா என்பது வரையிலும் அரசியல், தத்து வார்த்த கருத்துக்களை எடுத்துரைத்தார்.

.... இன்றைய இந்திய அரசியல் கட்ட மைப்பில் அதிகாரங்கள் மைய அரசிடம் குவிந்திருக்கிற நிலையே இருக்கிறது. மாநிலங்களுக்கு போதுமான அதிகா ரமோ, கூடுதல் சுயாட்சி அதிகாரமோ செயல்வடிவம் பெறவில்லை. அடிப் படையான நிதிக்கொள்கையை உருவாக் குவதிலோ அல்லது இதர பல முக்கிய பிரச்சனைகளிலோ முடிவெடுக்கும் அதிகாரம் போதுமான அளவிற்கு மாநிலங் களின் கைகளில் இல்லை. வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மத் திய அரசிடமிருந்து கிடைக்கும் வரி களின் பங்குத்தொகையையே பெரும் பாலும் நம்பியிருக்கவேண்டியுள்ளது என்று பிரகாஷ் காரத் கூறினார்.

அனைத்து மாநிலங்களுக்குமான இந்த நிலை, இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும், இடதுசாரிகளின் தலைமையிலான மாநிலங்களுக்கு கூடுதல் சுயாட்சியு மில்லை; போதுமான நிதி ஒதுக்கீடும் இல்லை என்ற சூழலில், நாடாளுமன் றத்தில் இடதுசாரிகளின் பலம் குறைந் துள்ள நிலையில், வளர்ச்சிக்கான மாற் றுக்கொள்கைகளை முன்வைக்க மட் டுமே முடியும் என்ற நிலை ஏற்பட்டுள் ளது என்றும் பிரகாஷ் காரத் சுட்டிக்காட் டினார். தேசிய அளவில் வளர்ச்சிக்கான மாற்றுக்கொள்கைகளை உறுதிபட வலியுறுத்தினாலும், மேற்குவங்கம், கேர ளம் போன்ற இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மாநிலங்களில், ஒட்டுமொத்த இந்தியாவிலும் அமலில் இருக்கும் கட்டமைப்புக்கு உட்பட்டே செயல்படவேண்டியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய அளவிலும், இடதுசாரிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களிலும் இடது சாரிகள் மேற்கொள்ளும் நிலைபாட்டை பற்றி விளக்கிய பிரகாஷ் காரத், சந்தை என்பதையே மார்க்சிஸ்டுகள் எதிர்க் கிறார்கள் என்ற கருத்தோட்டத்தை நிராகரித்தார். சந்தை என்பதையோ, அந்நிய நேரடி முதலீடு என்பதையோ கண்மூடித்தனமாக எதிர்க்கிறோம் என்ற கருத்து, மார்க்சிஸ்ட்டுகளைப் பற்றி தவறான முறையில் சித்தரிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

“சோசலிசத்தை கட்டமைப்பது என் பதற்கான பணிகளில் எங்களது அனு பவம், சோசலிச அமைப்புமுறையிலும் சந்தை என்பதன் செயல்பாடு எப்படிப் பட்டது என்பதை புரிந்துகொள்ளச் செய் திருக்கிறது... சந்தை என்பதை நிரா கரித்தோமானால், அல்லது சந்தை என் பதை ஒரு திட்டமிட்டபொருளாதாரத் துடன் ஒருங்கிணைப்பதில் தவறி ழைத்தோமானால், சோவியத் ஒன்றியத் தைப்போல, சிக்கலில் மாட்டிக்கொள் வோம்” என்று பிரகாஷ் காரத் கூறினார்.

இதை சீனா புரிந்துகொண்டிருக் கிறது. 1970களிலேயே தனது நிர்ணயிப்பு களை மாற்றிக்கொண்ட சீனா, வெற்றி கரமாக ஒரு சோசலிச சந்தைப்பொருளா தாரத்தை கட்டமைத்துக் கொண்டிருக் கிறது. மையப்படுத்தப்பட்ட திட்டத்தை அது கைவிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்நிய மூலதனத்தைப் பொறுத்த வரை, அது வருவதை எதிர்ப்பதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் கூறியதில்லை. உண்மையில், கட்சித் திட்டம், அந்நிய நேரடி முதலீடுகள் உள்ளே வருவதால் உற்பத்தி நடவடிக்கை களில் ஏற்படும் சாதகமான விளைவு களுக்கும், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் போன்ற துறைகளை ஊக வணிகத்தில் தள்ளும் நிதி முதலீடுகளை தங்குதடை யின்றி திறந்துவிடுவதற்கும் இடையில் இருக்கும் மிகத்தெளிவான வேறுபாட் டை சுட்டிக்காட்டியுள்ளது என்று கூறிய பிரகாஷ்காரத், “எந்தத் துறைகளில் அந் நிய நேரடி முதலீடு தேவைப்படுகிறது என்பதையும், எந்தத்துறைகள் ஒழுங் காற்று செய்யப்பட வேண்டும் என்பதை யும் நாம் தீர்மானிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

உலகம் முழுவதிலும் கடும் தாக்கத் தை ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார நெருக்கடியிலும் கூட இந்தியா பிழைத் துக்கொண்டது; மொத்த உள்நாட்டு உற் பத்தி வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; நமது கேள்வி என்னவென்றால், இந்த வளர்ச்சி நாட்டிற்கு தேவையான மிகச்சரி யான வளர்ச்சிதானா, நாட்டின் ஒட்டு மொத்த மக்களுக்கும் பலனளிக்கக் கூடிய வளர்ச்சிதானா என்பதே ஆகும் என்றும் அவர் கூறினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை பற்றி மட்டுமே பிரதானப் படுத்தி பேசுவது, நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைப் பற்றிய திரிக்கப்பட்ட ஒரு சித்திரத்தையே காட்டும்; உண்மை யில் இந்த வளர்ச்சி விகிதத்தால் பல னடைந்தவர்கள் மிகச்சிலரே என்ற உண் மையை சுட்டிக்காட்டிய பிரகாஷ் காரத், “கோடிக்கணக்கான டாலர்களை சம் பாதித்துக்கொண்டிருக்கும் மிகப்பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதத்தில் இந்தியா வேகமாக முன் னேறிக்கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகப்பெரும் பணக்காரர்களில் சிலரைக் கொண்ட நாடாக இந்தியா வளர்ந்திருக் கிறது; அதே நேரத்தில் மிகப்பெரும் எண் ணிக்கையில் ஏழைகளையும் கொண் டிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது” என்றும் பிரகாஷ் காரத் கூறினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிரகாஷ் காரத்

“விக்டர் கீர்னனும் இந்திய இடதுசாரிகளும்” என்ற தலைப்பில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கடந்த அக்டோபர் 22ம் நாளன்று ஆற்றிய உரைக்கான குறிப்புகள்...

....விக்டர் கீர்னன் 1938 முதல் 1946 வரை இந்தியாவில் வாழ்ந்தவர். “அவருக்கு பெரிதும் மரியாதை பெற்றுத்தந்த ஆய்வுப் பொருளிலிருந்து எதிர்பாராத விதமாக இந் தியா அவரை பல ஆண்டுகள் வெளியே விலக்கி வைத்திருந்தது.” இது அறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம், கீர்னனைப் பற்றிக் கூறியதாகும்.

நீண்ட காலம் அவர் இந்தியாவில் தங்கியி ருந்தது நமது அதிர்ஷ்டம் எனக்கூறலாம். அவர் இங்கு இருந்திராவிடில் இக்பால் மற் றும் பெய்ஸ் அகமது பெய்ஸின் படைப்புகள் முதன் முதலில் ஆங்கிலத்திற்கு அறிமுகப் படுத்தும் பணி நடைபெற்றிருக்காது. “இந் தியா குறித்து மார்க்ஸ்” போன்ற கட்டு ரைகளும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் அதனுடைய முதன்மைக் காலனியான இந் தியாவிற்குமான உறவுகள் குறித்த கட்டுரை களும் நமக்கு கிடைக்காமல் போயிருக்கக்கூடும்.

கீர்னன் இந்தியாவில் செலவிட்ட ஆண்டு கள் அனைத்துமே இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலமாகும். தேசிய விடுதலை உச்சகட்டத்தினை அடைந்ததும், தொடக்க நிலையிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் சில பகுதிகளில் வேர்விடத் தொடங்கியதும் இந்தக் காலத்தில்தான். கீர்னன் இந்தியாவிலி ருந்து விடைபெற்ற ஓராண்டிற்குள்ளாகவே இந்தியா விடுதலை அடைந்தது. பாகிஸ் தானும் பிறந்து விட்டது.

1930களின் பிந்தைய ஆண்டுகளும், 1940 களின் தொடக்க ஆண்டுகளும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தில் முக்கியமான காலம் ஆகும். 1920ம் ஆண்டே கட்சி தொடங் கப்பட்டாலும் கூட, 1934-35ல் மீரட் சதிவழக் கில் கைதான தோழர்கள் விடுதலையான பின்னரே, கட்சி உண்மையில் செயல்படத் தொடங்கியது.

கட்சியின் தலைமையகம் பம்பாயில் செயல்படத் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆன பின்னரே கீர்னன் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். விரைவிலேயே கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷியுடன் நட்பு கொண்டார்.

அந்தக்காலகட்டத்திலும், அதற்குப் பின்னர் வந்த 20 ஆண்டுகளிலும் கூட சில மையமான பிரச்சனைகளை சித்தாந்த ரீதியாக புரிந்து கொள்வதில் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகளும், இடதுசாரிகளும் சிர மப்பட்டனர்.

பிரச்சனைகள் என்னவென்றால்,

இந்திய முதலாளிகளின் குணாம்சம் குறித்த வரையறை; அவர்களுக்கும் ஏகாதி பத்தியத்திற்குமான உறவு நிலைகள் (ஒத்து ழைப்பும், முரண்பாடுகளும்), நிலப்பிரபுக்க ளுடனான அவர்களது உறவு நிலை; நாடாளு மன்ற ஜனநாயகத்தில் கட்சி எந்த அளவு பங்கேற்பது என்பது குறித்த கேள்விகளும்; கட்சியின் கட்டமைப்பு குறித்த கேள்விகளும்; இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நண்பர் என்ற முறையிலும், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்ற முறையிலும் இந்தப்பிரச்சனையினை குறித்து விக்டர் கீர்னன் அலசி ஆராய்ந்தார்.

இரண்டாவது உலகப்போரை ஏகாதி பத்திய போர் என்றே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடக்க நிலையில் வரையறை செய்திருந்தது. அதை கீர்னன் கடுமையாக எதிர்த்தார். கட்சி 1939ல் சட்ட விரோதமாக ஆக் கப்பட்டது. உலகப்போர் சோவியத் யூனிய னுக்கு எதிராக மாறப்போவதையும், பாசிச அபாயம் குறித்தும் இந்தியாவிலுள்ள கம்யூ னிஸ்டுகள் உணரவில்லை என்பது அவரது விமர்சனம்.

அதற்குப்பின்னர் 1941 நவம்பர் மாதம் போரைக் குறித்த அணுகுமுறையில் முழுமை யாக நேர் எதிர்முனைக்குச் சென்று, அதை மக்கள் யுத்தம் என்று அழைத்ததையும் போருக்கு ஆதரவுஅளித்ததையும் அவர் விமர்சித்தார். நாஜிசத்துக்கும், ஜப்பானிய இராணுவக் கொள்கைகளுக்கும் எதிராக நடைபெற்ற உலகம் தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது சரியானதே. 1942 ‘வெள் ளையனே வெளியேறு’ இயக்கத்திலிருந்து கட்சி வெளியேறியது. காங்கிரஸ் தலைவர் களை விடுதலை செய்ய வேண்டும் எனவும், தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கையினை எழுப் பியது. “வெள்ளையனே வெளியேறு” இயக் கத்தை எதிர்த்ததில் தான் கட்சி தவறு செய்து விட்டது. சர்வதேச முரண்பாட்டினையும் - அதாவது பாசிசத்திற்கெதிரான போராட்டத் தினையும் தேசிய முரண்பாட்டினையும்-அதா வது தேசிய விடுதலைப்போராட்டத்தினை யும், ஒன்றிணைப்பதில் கட்சி தவறிவிட்டது.

காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைமை யிலான தேசிய இயக்கத்தின் பால் கம்யூ னிஸ்ட் கட்சி பல விதமான அணுகுமுறை களையும் உத்திகளையும் கடைப்பிடித்தது. பல்வேறு காலகட்டங்களில் இந்திய முத லாளிகள் குறித்த கம்யூனிஸ்ட் கட்சியின் புரி தலின் அடிப்படையிலேயே அவை அமைந்தன.

அன்றைய கட்டத்தில் கீர்னன் உட்பட மார்க்சிஸ்டுகள் எவரும், இந்திய பூர்ஷ்வாக் கள் பற்றி பெரிதும் கருத்தில் கொள்ளவில் லை. முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலை மைகளும், நிலப்பிரபுத்துவமும் கோலோச்சிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு காலனி நாட்டிலிருக்கும் தொடக்க நிலை முதலாளி கள் ஒரு ஆரோக்கியமான விரைவான முத லாளித்துவ வளர்ச்சிக்கு உதவப்போவதில் லை என்ற நிர்ணயிப்பே அதற்குக் காரணம்.

இந்தியா குறித்த கார்ல் மார்க்சின் நிர்ண யிப்புகளுடன் கீர்னனுக்கு வேறுபாடுகள் இருந்தன. “கடந்த காலம் என்ற பாரச்சுமை குறித்தும், கண்ணுக்குப் புலப்படாத பல தடை கள் குறித்தும் மார்க்ஸ் குறைத்து மதிப்பீடு செய்துவிட்டார். தடைகளை மீறி சமூகத் தினை மாற்றி விடும் சக்தி முதலாளித்துவத் திற்கு உண்டு என மார்க்ஸ் அதீதமான மதிப் பீடு செய்துவிட்டார். ஆனால், நடைமுறை யில், முதலாளித்துவமும் சரி, அதற்குப் பின் னர் வந்த சோஷலிசமும் சரி, ஸ்தல நிலை மைகள் ஏற்படுத்திய பின்னணியால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன” என்று அவர் கூறினார். (“ஏகாதிபத்தியமும், அதன் முரண் பாடுகளும்”-பக்.62)

‘இந்திய முதலாளிகளுக்கு போதிய தகுதி இல்லை. பெரிதாக எதையும் செய்வதற்கான துணிவோ, சக்தியோ எதுவுமில்லை’ என்று ஜவஹர்லால் நேரு கூறியதை மேற்கோள் காட்டிய கீர்னன் “இன்னும் 30 ஆண்டுகள் போனாலும் ஜோசியம் தான் இந்தியாவின் முக்கியமான தொழில்களில் ஒன்றாக இருக் கப்போகிறது” என பரிகாசம் செய்தார்.

ஆனால், வியக்கத்தக்க வகையில் இந்தி யாவில் முதலாளித்துவம் எல்லா வகையான நெளிவு சுளிவுகளோடும் விரைவாக விரி வடைந்து வருகிறது. இந்த முதலாளித்துவ வர்க்கத்தை ஒன்றுமில்லை எனக் கண்டு கொள்ளாமலிருப்பதும், குறைத்து மதிப்பிடு வதுமான மோசமான போக்கு கடந்த காலங் களில் இந்திய இடதுசாரிகள் மத்தியில் இருந்து வந்திருக்கிறது. மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட இன்றைய அதி தீவிர இடதுசாரிகள் இந்தப் போக்கின் இன்றைய பிரதிநிதிகளாய் இருக் கின்றனர்.

முதலாளிகளை வியந்து பாராட்டுவது, இடதுசாரிகளின் மத்தியில் உள்ள மற்றொரு போக்காகும். விடுதலைக்கு முன்பாக, கம்யூ னிஸ்ட் கட்சிக்குள் இடதுசாரி தேசியப் போக்கு ஒன்றும் இருந்திருக்காது. விக்டர் கீர்னனின் நண்பர்கள் சிலர் (அதில் சிலர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கற்றவர் கள்) கட்சிக்குள் இத்தகைய உணர்வு நிலை யினைப் பிரதிபலிப்பவர்களாக இருந்தனர். தேசிய முதலாளிகளையும் அவர்கள் தலை மை தாங்கும் தேசிய இயக்கத்தினையும் ஒரு முற்போக்கு நிகழ்வாக பார்க்கும் வழக்கும் அவர்களுக்கு இருந்தது. விடுதலைக்குப் பின்னர் “முற்போக்கு தேசிய பூர்ஷ்வா”க்களு டன் இணைந்த கூட்டணியாக மாற முடியும் என்ற அடிப்படையில் இடதுசாரிகளின் ஒரு பகுதி செயல்படத் தொடங்கியது. இது ஒரு வகையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியால் ஊக்குவிக்கப்பட்ட ஒன்றாகும்.

ஏகாதிபத்திய நிதி மூலதனத்துடன் இந்திய பூர்ஷ்வாக்களுக்கு ஒருபுறத்தில் உள்ளார்ந்த முரண்பாடுகள், மறுபுறத்தில் ஒத்துழைப்பு என்ற அவர்களின் இரட்டைத் தன்மையினை அங்கீகரிப்பதற்கு கம்யூ னிஸ்ட் கட்சிக்கு 40 ஆண்டுகள் பிடித்தது. நவீன-தாராளவாதச் சூழலில், இந்திய முதலாளி வர்க்கம் பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது. ஒரு காலத்தில் குறைத்து மதிப்பிடப்பட்ட அதன் உள்ளார்ந்த சக்தி இன்று பிரம்மாண்டமாக வெளிப்பட்டிருக் கிறது. அதேவேளையில், விக்டர் கீர்னன் கூறுவது போல, “உள்நாட்டுப் பின்னணி” யால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் முதலா ளித்துவமாகவும் அது உள்ளது.

‘ஏகாதிபத்தியமும் அதன் முரண்பாடு களும்’ என்ற தனது புத்தகத்தில், இந்தியா வின் முதலாளித்துவ வளர்ச்சி குறித்து கீர் னன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “கூடு தலாக, விவசாயத்திலும், தொழிலிலும் குறிப் பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே வேளையில், தனக்கே உரித்தான சமூக அமைப்பிலிருந்து தன்னை முழுமையாக வெட்டிக்கொள்ளவில்லை. எனவே, தற் போதைய சமூகக் கட்டமைப்பினால் தீர்க்க இயலாத பிரச்சனைகளையும் அது சந்திக் கிறது. (பக்.134)

இந்திய முதலாளித்துவ வர்க்கம் குறித்து ஆய்வு இன்று அவசியமாகிறது. இந்திய பூர்ஷ்வாக்களைப் பற்றிய மார்க்சிய ஆய்வு இன்று வரையிலான அனைத்து அம்சங் களையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண் டும். இங்கு அமர்ந்திருக்கும் சான்றோர்கள் பலர் அதைச் செய்வார்கள் என நம்புகிறேன். இந்திய சமூகத்திற்கே உரித்தான சில பாகு பாடுகள், சாதிய, பழங்குடி இன, பாலின ஒடுக் குமுறைகளில் அவை பிரதிபலிக்கின்றன. குறிப்பிட்ட பிரதேசங்கள் சுதந்திரம் மற்றும் வளர்ச்சியிலிருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் இந்தியாவின் வர்க்க கட்டமைப்பின் மீதும், சமூக படிநிலை மீதும் எத்தகைய செல்வாக் கினைச் செலுத்துகின்றன. ஒன்றையொன்று எவ்வாறுஇணைக்கின்றன என்பதை சித்தாந்த ரீதியிலும், நடைமுறையிலும் புரிந்து கொள்வதற்கு அத்தகைய ஆய்வுகள் உதவும்.

இப்போதும் கூட எங்கெல்லாம் முன்பு போராட்ட இயக்கங்கள் நடைபெற்றனவோ, அந்தப்பகுதிகளில் அல்லது அதை ஒட்டிய பகுதிகளில் இருந்து தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெருமளவு ஆதரவு கிடைத்து வருகிறது. 1941 முதல் 1948 வரை காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும், கிராமப்புற சுரண்டலுக்கு எதிராகவும் வரலாற்று ரீதியான இரண்டு முக்கிய நீரோட்டங்கள் இருந்தன. அந்த நீரோட்டங்களின் வெற்றிகரமான போராட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சி தலை மை தாங்கிநடத்தியது. இவ்வாறு, ஏகாதிபத் தியத்திற்கும், நிலப்பிரபுத்துவத்திற்கும் எதி ரான போராட்டங்களை இணைத்து அதற்கு தலைமை தாங்கி நடத்தியதால் கட்சிக்கு வெகுஜன ஆதரவு கிடைத்தது. தெபாகா இயக்கம் (வங்கம்), வடக்கு மலபார் (கேரளா), ஆதிவாசிகள் போராட்டம் (திரிபுரா) மற்றும் தெலுங்கானா போராட்டங்கள் இவ்வகைப்பட் டவையாகும்.

கீர்னன் கம்யூனிஸ்ட் கட்சியின் நண்பராக வும் ஆதரவாளராகவும் இருந்தவர். அதே வேளையில், கட்சியின் அன்றைய பலவீனங் களைச் சுட்டிக்காட்டி, விமர்சனப் பூர்வமான ஆய்வினை செய்வதற்கும் அவர் தயங்கிய தில்லை. பம்பாய் நகரில் கட்சியின் தலைமை யகத்திற்கு அடிக்கடி வருகை தந்த கீர்னன், கட்சியின் தலைவர்களுக்கும், ஊழியர்களுக் கும் சித்தாந்த அறிவினைப் பெறுவதில் அன்று இருந்த பலவீனத்தைப் பற்றி கவலை தெரிவித்தார். எல்லாரும் நடைமுறை வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருந் தனர். ஆனால், தத்துவக் கல்வியில் கவனம் செலுத்தாது இருந்தனர். சித்தாந்தக் கல்வி என்பது, காஃபி விடுதிகளில் இருந்து கொண்டு சில அறிவுஜீவிகள் எல்லையற்ற வேதாந்தம் பேசிக்கொண்டிருப்பது போன்று ஆகிவிடக்கூடாது என நினைத்தோ என் னவோ, தத்துவ அறிவை வளர்த்துக் கொள் வதில் கம்யூனிஸ்டுகள் அன்று ஆர்வம் காட்டவி ல்லை.

“இந்த எட்டு ஆண்டுகளில் ஒரு தடவை கூட அவர்கள் சித்தாந்தப் பிரச்சனைகளை விவாதித்ததாக நான் கேள்விப்படவில்லை.” என அவர் கூறினார். தலைமையகம் குறித்து அவர் கூறிய கருத்து ஒருவேளை சரியாக இருக்கலாம். ஆனால் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அணிதிரட்டி களத்தில் இறங்கிப் போராடிய கம்யூனிஸ்டுகள் மத்தி யில் சித்தாந்தம் மற்றும் நடைமுறை குறித்த அம்சங்கள் வேர்விடத் தொடங்கிவிட்டன. “கேரளாவின் தேசிய இனப் பிரச்சனை” என்ற தலைப்பில் சித்தாந்த அடிப்படையில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு எழுதிய புத்தகம் இதில் ஒரு எடுத்துக்காட்டாகும். வரலாற்றி யல் பொருள் முதல்வாதத்தின் அடிப்படை யில் கேரள சமூகத்தை அவர் அதில் ஆய்வு செய்திருந்தார். எனினும் இந்தியாவில் கம்யூ னிஸ்ட் இயக்கத்திற்கு சில குறிப்பிட்ட இடங் களில் மட்டுமே பல கோடி மக்கள் கொண்ட ஆதரவுதளங்கள் உள்ளன. கம்யூனிஸ்டுகள் ஆளுகின்ற மூன்று மாநிலங்களில் மட்டும் 12 கோடி மக்கள் உள்ளனர். நாடாளுமன்ற முறை யில் கம்யூனிஸ்டுகள் சிறந்த அனுபவம் பெற்றிருக்கின்றனர். இந்த அனுபவங்களின் பயனாக சோஷலிச அமைப்பிலும் கூட பல கட்சி ஆட்சி முறையில் இயங்க முடியும் என சித்தாந்த ரீதியான முடிவிற்கு வந்திருக்கின்றனர்.

பிற்காலத்தி ல் விக்டர் கீர்னனே எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில், கடந்த கால கம்யூ னிஸ்ட் கட்சி பற்றி தான் சற்று கடுமையாக விமர்சித்துவிட்டதாக கூறியிருக்கிறார். அந் தக் காலத்தில் தலைவர்கள் மற்றும் ஊழி யர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் குறித்து வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தார். அவர் இங்கு இருந்த 1940ம் ஆண்டுகள் கம்யூ னிஸ்டுகள் மக்கள் மத்தியில் பணியாற்றி, தொழிலாளர்களைத் திரட்டிப் போராடி மக த்தான தியாகங்களைப் புரிந்த காலமாகும். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் பென் பிராட்லி (இவ ரைப் பற்றி முந்தைய அமர்வில் குறிப்பிட்டி ருக்கிறேன்) உள்ளிட்ட பலரும் பல ஆண்டு கள் சிறையில் கழித்த காலம் இது. மீரட் சதி வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்க ளுடன் பென் பிராட்லியும் சிறையில் அடைக் கப்பட்டார்.

இன்றைய இந்தியாவில் இடதுசாரிகள்

கிராமப்புற வறுமையினைப் போக்குவ தற்கு மிகவும் அவசியமான நிலச் சீர்திருத் தங்களுக்காக இன்றளவும் கம்யூனிஸ்டுகள் தங்களது போராட்டத்தினைத் தொடர்கிறார் கள். அந்த வகையில் 1940களில் நிலம் கோரி கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய போராட்ட நிகழ்ச்சி நிரல் இன்னும் தொடர்கிறது. சுரண் டல் தன்மை கொண்ட நில உறவுகளுக்கு எதிரான போராட்டம் நிலப்பிரபுத்துவத்தினை எதிர்த்த போராட்டம் மட்டுமல்ல. சாதிய, சமூக மற்றும் பாலின ஒடுக்குமுறைகளுக் கும் எதிரான போராட்டமுமாகும்.

நவீன - தாராளவாத முதலாளித்துவம், சுரண்டலை தீவிரப்படுத்துவதுடன், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் கூர்மைப்படுத் தியிருக்கிறது. போர்பஸ் மேகசீன் தகவலின் படி, 2009ல் இந்தியாவில் இருந்த டாலர் பில்லியனர்களின் (சுமார் ரூ.4,500 கோடி சொத்து உள்ளவர்கள்) எண்ணிக்கை 52. இன்று 2010ல் அந்த எண்ணிக்கை 69 ஆக உயர்ந்திருக்கிறது. புராதன கால மூலதனக் குவிப்பு வடிவங்கள் கூட இன்று வெளிப்பட்டு வருகின்றன. நவீன தாராளவாதக் கொள்கை களுக்கு எதிராகவும், மாற்றுக் கொள்கை களுக்காகவும் இடதுசாரிகள் இன்று போராடி வருகின்றனர்.

வகுப்புவாத அரசியலையும், சாதி அடிப் படையிலான அடையாள அரசியலையும் எதிர்த்து, மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

நவீன - தாராளவாதக் கொள்கைகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றத்தினை ஏற்படுத்திவிட்டன. அமெரிக் காவுடன் இந்திய ஆளும் வர்க்கங்கள் ஒரு கேந்திரக் கூட்டணியினை உருவாக்கிவிட் டன. உள்நாட்டுக் கொள்கைகளிலும் இது பிரதிபலிக்கிறது. இவ்வாறு அமெரிக்கா வினை மென்மேலும் சார்ந்து நிற்கும் கொள் கைகளுக்கு எதிராக, இந்திய நாட்டின் நலன் களுக்கு உகந்த சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைகளுக்காக இடதுசாரிகள் போராடி வருகின்றனர்.

விக்டர் கீர்னனின் 90வது பிறந்த நாளில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றினை வெளியிட்டோம். அடுத்த ஆண்டு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள இடதுசாரிகள் இணைந்து, இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராகிய பெய்ஸ் அகமது பெய்ஸின் நூற்றாண்டு விழாவினை கொண்டாட உள் ளோம். அந்த வேளையில் கீர்னன் ஆங்கிலத் தில் மொழிபெயர்த்த பெய்ஸின் கவிதைகளை வெளியிட முடிவு செய்துள்ளோம். ஏற்கெ னவே அவை அச்சில் இல்லாததால், அவற் றைத் தொகுத்து வெளியிட வேண்டியுள்ளது. இந்தியாவின் நண்பரான விக்டர் கீர்னனை இந்தியத் துணைக் கண்டத்தின் இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்ய இது ஒரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.

-தமிழில் : இ.எம்.ஜோசப்