சனி, 25 செப்டம்பர், 2010

காவியுடை தீவிரவாதம்: ஏனிந்தக் கூப்பாடு? -ஹன்னன் முல்லா

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “காவியுடைத் தீவிரவாதம்” என்றதோர் சொற்றொடரைப் பயன்படுத்தினார் என்பதற்காக பாஜக, சிவசேனா மற்றும் அவர்களது கூட்டாளிகள், அமைச்சருக்கு எதிராகக் கூப்பாடு போட்டு வருகிறார்கள்.

தீவிரவாதிகள் பற்றிய பிரச்சனையை ஆராய்வதற்காகக் கூட்டப்பட்டிருந்த உயர்மட்டக் காவல்துறை அதிகாரிகளின் கூட்டம் ஒன்றில் அமைச்சர் சிதம்பரம் மேற்படி சொற்றொடரைப் பயன்படுத்திட நேர்ந்தது. அந்தப் பிரச்சனை சம்பந்தமாகப் பாரதிய ஜனதாக் கட்சியினரும் அவர்களது கூட்டாளிகளும் நாடாளுமன்றத்தை 2 நாட்கள் நடக்கவிடாமல் கூச்சல்போட்டனர். அமைச்சர் மேற்படி சொற்றொடரை வாபஸ்பெற்றாக வேண்டும் என்பது அவர்களது வாதமாகும். அத்துடன் அந்த மாதிரிப் பேசியமைக்காக அவர் மன்னிப்புக் கேட்டாக வேண்டும் என்றும் பாஜகவினர் வாதாடுகிறார்கள்.

இங்கு ஒரு கேள்வி எழுகிறது. அமைச்சர் சிதம்பரம் அப்படி என்ன தப்பாகப் பேசிவிட்டார்? கடந்த சில வருடங்களாக இந்துத்துவா தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விடவில்லையா? நாண்டட் குண்டுவெடிப்பின் போது இரண்டு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் பலியானார்கள். குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது மேற்படி விபத்து ஏற்பட்டது. காவல்துறையினர் அது சம்பந்தமாக வேறு சில ஆர்எஸ்எஸ் நபர்களைக் கைது செய்தனர். அவர்கள் ஏன் வெடிகுண்டுகளைத் தயாரித்தனர்? அபிநவ் பாரத் போன்ற அமைப்புக்கள் பல்வேறு வன்முறைச் செயல்களை அரங்கேற்றி வருகின்றன. 2006ம் வருடம் மாலேகாவில் ஒரு குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. மகாராஷ்டிரத்திலுள்ள மாலேகாவ் மசூதியில் அந்தச் சம்பவம் நடந்தது. ஆந்திராவிலுள்ள ஐதராபாத் நகரைச் சேர்ந்த மெக்கா மசூதியிலும் குண்டுவெடித்தது. மேலும் கோவா, கான்பூர் போன்ற இடங்களிலும் குண்டுகள் வெடித்தன. மேற்படி சம்பவங்கள் யாவற்றிலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கூட்டாளி பஜ்ரங்தளத்தின் தொடர்புகள் இருந்தன. அவற்றில் வேறு பல ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கும் தொடர்பு உண்டு. 2003ம் வருடம் ஜல்கான் (மகாராஷ்டிரம்) குண்டுவெடிப்பு, 2005ல் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாவ் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பு, 2008ல் தென்காசியில் நடந்த குண்டுவெடிப்பு என்று பட்டியல் நீள்கிறது. மேற்படி சம்பவங்களில் பல அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 12க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவ்வாறு கைதான நபர்களில், பேச்சில் விஷம் கக்கும் காவியுடைப் பெண்சாமியார் சாத்வி பிரக்ஞாவும் ஒருவராவார். கைதான நபர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஆவார்கள். அவர்களது ஒரே நோக்கம், முஸ்லிம் சிறுபான்மை மக்களை அழிப்பதுதான். எனவே ஆர்எஸ்எஸ் மற்றும் அவர்களது கூட்டாளிகள் பற்றி குறிப்பிடும்போது காவியுடைத் தீவிரவாதம் என்று குறிப்பிடுவதில் எந்த ஒரு தப்புமே கிடையாது. காவி நிறம் இந்துமதத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாகும் என்று ஒரு சில அதி மேதாவிகள் சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக். யாருமே இந்து பொதுமக்களைத் தீவிரவாதிகள் என்று சொல்வதில்லை. காவியைக் கட்டிக்கொண்டு மதவெறியாட்டம் போடும் இந்துத்துவா வாதிகளைத்தான் குறிப்பிட்டுச் சொல்கிறோம்.

பாஜகவினர் தாங்கள்தான் இந்துக்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி என்று சொல்வதெல்லாம் கலப்படமில்லாததோர் பச்சைப்பொய்யாகும். அவர்கள் தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதற்காகவே அவ்வாறு மத வேஷம்கட்டிக்கொண்டு நாடகமாடி வருகிறார்கள்.
மேலும் எந்த ஒரு தீவிரவாதிக்கும் மதமும் கிடையாது, கோட்பாடுகளும் கிடையாது. அவர்களையெல்லாம் வேரும் வேரடி மண்ணுமில்லாமல் களையெடுத்தாக வேண்டியது ஆட்சியாளர்களுடைய கடமையாகும்.
தீவிரவாதி என்றாலே அவர் முஸ்லிம்தான் என்றதோர் வாதம் மிக மிகப் போலியானதோர் வாதமாகும். பெரும்பாலான முஸ்லிம் பொது மக்களுக்கும் தீவிரவாதச் செயல்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.

மேலும் மதச்சார்பின்மையின் சின்னமாகத் திகழ்ந்த பாபர் மசூதி தகர்க்கப்பட்டதற்குப் பிறகுதான் நாடெங்கும் பல்வேறு வகையான தீவிரவாதச் செயல்கள் முளைவிடத் தொடங்கின. முஸ்லிமானாலும் சரி, இந்துவானாலும் சரி அவர் ஒரு தீவிரவாதியாகச் செயல்படுவாரேயானால் அவரைச் சட்டப்படி தண்டித்தேயாக வேண்டும். இந்தப் பிரச்சனையில் காங்கிரஸ்காரர்கள் மவுனச் சாமியார்களாகக் கொலுவீற்றிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமானதோர் சங்கதியாகும். அவர்கள் வகுப்புவாதப் பிரச்சனைகளில் ஒருவித சமரச மனப்பான்மையுடனேயே செயல்பட்டு வருகிறார்கள். இது வேதனைப்பட வேண்டியதோர் அம்சமாகும். காங்கிரசார், பாஜகவினரின் வெறிப்பிரச்சாரங்களை எதிர்த்து உறுதியுடன் செயல்படுவதற்குப் பயப்படுகிறார்கள். பாஜகவினரை எதிர்த்துத் தத்துவார்த்த அடிப்படையிலும் அரசியல் ரீதியாகவும் போராடியாக வேண்டியதோர் மிகமிக அவசியமான அவசரமான நேரம் இது.

நம்முடைய நாட்டின் கட்டுக்கோப்பையும், ஒற்றுமையையும் கட்டிக்காத்திட வேண்டுமானால் நாம் அனைவரும் திரண்டெழுந்து வகுப்புவாத சக்திகளை முறியடித்திட வேண்டும்.

- “பீப்பிள்ஸ் டெமாக்ரசி”ஏட்டிலிருந்து...
தமிழில் : கே.அறம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக